‘எனக்கு பிரஷர் இருக்கு... மாத்திரை போட்டுட்டு வந்திடுறேன்’ என்று பரபரப்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரத்த அழுத்தப் பிரச்னை என்றால் என்ன? ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி? பயனுள்ள ஆலோசனை சொல்கிறார் இதய நோய் நிபுணர் சி.ஆறுமுகம்..
உடலில் உள்ள தமனி ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் பாய்கிற வேகத்தின் அளவையே ரத்த அழுத்தம் என்று குறிப்பிடுகிறோம். இதயம் சுருங்கி விரியும்போது ரத்தம் எவ்வளவு வேகமாகப் பாய்கிறது என்பதை வைத்தே ரத்த அழுத்தம் அளவிடப்படுகிறது. அதன்படி, 120/80 மி.மீ. ஆஃப் மெர்குரி என்ற அளவுதான் சராசரியான ரத்த அழுத்தமாகக் கணக்கிடப்படுகிறது.
ரத்த அழுத்தம் என்பது மாறிக்கொண்டே இருக்கும். எனவே, ஒரே ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனையை செய்துகொண்டு, அதுதான் நிலையான அளவு என்று எண்ண வேண்டாம். ஒரு நாளில் பல்வேறு சமயங்களில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து அதன் அடிப்படையிலேயே உங்கள் சராசரி ரத்த அழுத்தத்தைப் பதிவுசெய்ய வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் மட்டுமே பிரச்னை அல்ல; குறைவான ரத்த அழுத்தமும் பிரச்னைதான். ரத்த அழுத்தம் குறையும்போது மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவும் குறையும். அதனால் மயக்கம் ஏற்படலாம். பெரும்பாலும் குறைவான ரத்த அழுத்தம் என்பது நாமாக ஏற்படுத்திக்கொள்வது. சில மருந்துகளும் ரத்த அழுத்தத்தைக் குறைத்துவிடக் கூடும். இதுதவிர உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போதும், ரத்த இழப்பு ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் குறையலாம்.
ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழ வகைகளையும், ஓட்ஸ் மற்றும் மீன் உணவுகளையும் சாப்பிடலாம்.
உணவில் மிகக் குறைந்த அளவில் உப்பைப் பயன்படுத்துவதும், நிறைவுற்ற கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இதற்கு மருத்துவரின் பரிந்துரையின்பேரில் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக