st

''மனம்''-(Manam).
மனம் என்ற சொல்லே அமானுஷ்யமானதுதான். மனம் என்ற ஒரு கரணத்தை உடைய ஒரே பிறவி, ஒப்பற்ற பிறவி மனிதப் பிறவி மட்டுமே. உலகில் எத்தனை மதங்கள், பிரிவுகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் முன் வைப்பது மனதின் நிலை பற்றிய கோட்பாடுகளையே. நம் தேசத்தில் ரிஷிகளும், சித்தர்களும், யோகிகளும் கர்ம யோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம், மந்திர யோகம் என்று பலதரப்பட்ட யோக மார்க்கங்களை நமக்கு தந்து அருளியிருக்கிறார்கள். அவை அனைத்திலும் முக்கியமான பயிற்சியாகவும், அடிப்படை விஷயமாகத் திகழ்வதும் மனதைப் பக்குவப்படுத்தும் விஷயமேயாகும். மனம் எவனுக்கு அடங்கி நிற்கிறதோ, அவனுக்கு இந்த உலகமே அடங்கி நிற்கும். மனம் உடைய ஈசன் மனுஷன். அந்த மனம் செயலற்று நின்று விட்டால், அவன் ஈசன்.

பிராண வாயுவை குதிரை என்று வர்ணிப்பது போல மனதைக் குரங்கோடும், யானையோடும் ஒப்பிட்டுச் சொல்வார்கள். சாதாரணமாக மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. கிளை விட்டுக் கிளை தாவும் குரங்கினைப் போல நிலை விட்டு நிலை மாறிக் கொண்டே இருக்கும். யானை அசையாது நிற்காது. எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கும். அது போல மனமும் சலனமடைந்து கொண்டே இருக்கும். ஒரு நிலையில் நிற்காது. பேய் அதாவது அகத்தே விளங்கும் அகப்பேய் என்றும் வர்ணிப்பார்கள். அந்த அளவு பேயாட்டம் போடுமாம் மனம். நம் மனமே நமக்கு சொர்க்கம். நம் மனமே நமக்கு நரகம். அதுவே உற்ற நண்பன். அதுவே கெட்ட பகைவனும் கூட. எனவே மனதை அடக்கி அதன் மேல் சவாரி செய்யப் பழகிவிட்டால் எல்லா உலகங்களையும் வெல்லலாம்.

அலையும் புலனைப் பின்தொடர்ந்தே
அலையு மனதோ நம்மறிவைக்
கலக்கி இழுக்கின்றது நீர்மேல்
காற்று கலத்தை இழுப்பதுபோல்

கடல் நீரில் மிதந்து செல்லும் பாய்மரக் கப்பலை புயல் காற்று அங்குமிங்கும் ஆட்டிப்படைத்து இழுப்பது போல், புலன் வழிப் போகும் மனமானது நம் அறிவைக் கலங்கிடச் செய்து, நிலையின்றி இழுத்தடிக்கின்றது. எனவே மனமானது புலன் வழி போகாமல் அறிவின் தெளிவைப் பெற்று, புலன்களை அடக்கி இயங்கும் போது தூய்மையடைந்து, அமைதியடைகின்றது என்பது புரிய வருகிறது. மனம் என்ற ஒன்றே கிடையாது என்று கூட சொல்பவர்கள் உணடு. சரியான புரிதல் இல்லாமையோ, அல்லது மற்றவர்களை குறை சொல்வதற்காகவோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. உண்மையில் மனம் என்றால் என்ன ? நமது மொத்த எண்ணங்களின் தொகுப்பே மனமாகும். எனவே தான் நம் முன்னோர்கள் நல்லெண்ணங்களையே எண்ண வேண்டும் என்பார்கள். அவ்வாறு நல்லெண்ணங்களையே எண்ண வேண்டும் என்றால் அதற்கேற்ற வாழ்க்கைச் சூழல் அமைந்தால்தான் சாத்தியமாகும். அதற்கு நல்லெண்ணம், நல்ல செயல்கள், நல்ல சொல் உள்ளவர்களோடு கூட வேண்டும்.

வாழ்க்கையில் நாம் மேல் நோக்கிச் செல்வதற்கு நமக்கு உத்வேகம் கொடுப்பது நம் எண்ணங்களே ஆகும். எனவே அத்தகைய எண்ணங்கள் உயர்ந்த, நல்ல எண்ணங்களாக இருப்பது அவசியமாகும். ஆன்மிக நெறியாளர்களோடு கூடும் போதும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடும் போதும் இத்தகைய நல்லெண்ணங்கள் வளரும். இதையே நல்லார் இணக்கமும், நின் பூசை நேசமும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவார்கள். இறைவனுக்குப் பயப்படுபவன் தீய எண்ணங்களை தவிர்த்து விடுவான். எனவே இறைவனுடைய கைங்கரியங்களைச் செய்வதாலும், அத்தகைய மேன்மையான மக்களோடு கூடி வாழ்வதாலும் தீய எண்ணங்களை மறந்து நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்ள ஏதுவாகும். இதையே மன சுத்தி என்பார்கள். இதையே வள்ளுவர் மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பார். இதற்காகவே பதஞ்சலி மகான் இயமம், நியமம் என்ற இரண்டு படித்தரங்களை அல்லது பயிற்சி முறையை முன் வைக்கிறார். இத்தகைய மனசுத்தி இல்லாதவர்களின் தியானம் என்பது போராட்டமான மன ஒருமைப்பாட்டுப் பயிற்சியாகவே விளங்கும். மேல் நிலைகளை எட்ட முடியாது. தெளிவடையாத சாதாரண மனதிற்கு தெய்வீக ஞான வாசலின் தங்கச் சாவி கிட்டுவதில்லை.

மனமானது தன்னிச்சையாக இயங்கும் சக்தி வாழ்ந்ததாக உள்ளது. உலகில் உள்ள எந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்தி மனோ சக்தி. மனதின் வேகத்திற்கு இணையான வேகம் உலகில் இல்லை. அத்தகைய மனம் கட்டுப்பட்டால் உடலும் நம் கட்டுக்குள் இருக்கும். மனதால் உருவாக்கப்படுவதே உடல். மனதை அடக்கினால் உடல் அடங்கும். நாம் உண்ணும் உணவும், பிராணனும் மனதின் வலிமையில் பெரும் பங்கு வகிக்கின்றன.

Post a Comment