பெற்றோர் சொல்வதே வேதம்... வீடுதான் உலகம் என்றிருந்த பிள்ளைகளுக்கு, டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும், காட்சிகளும் கனவுகளும் மாற ஆரம்பிக்கின்றன. உடலும் மனதும் புரியாத புதிர்களாகின்றன. அந்தரங்கம் பற்றிய ஆர்வம் தலை தூக்குகிறது. அழகைப் பற்றிய தேடல் அதிகமாகிறது. டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிற ஆண், பெண் பிள்ளைகளின் சிந்தனை, செயல், புறத்தோற்றம், ஆரோக்கியம் என எல்லாவற்றையும் தீர்மானிப்பதில், அந்த வயதில் அவர்கள் உட்கொள்கிற உணவுகளுக்கே முதலிடம்! அது மட்டுமில்லை... வாழ்நாள் முழுக்க அவர்களது ஆரோக்கியத்தைப் பேணி காப்பதற்கான அஸ்திவாரமும், இதுவே!
குழந்தைத்தன்மை கொஞ்சூண்டு மிச்சமிருக்கிற டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு, அந்தப் பருவத்தின் தொடக்கத்தில் முதலில் கொடுக்க வேண்டியது கால்சியமும் இரும்புச் சத்தும் நிறைந்த உணவுகள்.
கீரையின் மூலம் கிடைக்கிற இரும்பும் கால்சியமும் இவர்களுக்கு மிகச்சிறந்த பலன்களைக் கொடுக்கும். மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரைகள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவை. கீரையில் உள்ள குளோரோபில் சரும நிறத்தைக் கூட்டி, அழகைத் தரும். உடலில் கால்சியம் குறையும் போது, சோர்வு உண்டாகும். வியர்வை அதிகமாக வெளியேறினால் கூட, கால்சியம் வீணாவதாகவே அர்த்தம். அதை ஈடுகட்ட, பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, சாத்துக்குடி போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளை வெயிலே படாமல், ஏசி-க்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோரும் உண்டு. டீன் ஏஜில் அதெல்லாம் சரிப்படாது. 13 வயதுக்குப் பிறகு வைட்டமின் டி என்கிற சத்து அவசியம் தேவை. எதிர்ப்புத் திறனுக்கு அதுதான் ஆதாரம். உடலில் கால்சியம் சேர்வதற்கும், வைட்டமின் டியின் பங்கு மகத்தானது.
என்னதான் உணவின் மூலம் கால்சியம் சேர்ந்தாலுமே, அதற்கு மூலமான வைட்டமின் டி ஆனது, சூரிய வெளிச்சத்திலிருந்து மட்டும்தான் கிடைக்கும். ‘வெயில்ல போனா கருத்துடுவே... உடம்புக்கு ஆகாது’ என்றெல்லாம் பிள்ளைகளை நிழலோட்டமாக வளர்க்காமல், பள்ளி உள்பட வெளியிடங்களுக்கு சைக்கிளில் செல்லப் பழக்குங்கள். வெயில் பட விளையாட அனுமதியுங்கள்.
ஆஸ்தான நடிகை, நடிகரைப் பார்த்து, அவர்களைப் போலவே கட்டுக்கோப்பான உடல்வாகுக்கு ஆசைப்படுவதை இன்று டீன் ஏஜ் ஆண், பெண்களிடம் அதிகம் பார்க்கிறோம். 13 வயதுப் பெண் குழந்தைக்குக்கூட, எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயம்! அதற்காக டயட் என்கிற பெயரில் பட்டினி! ஆண் பிள்ளைகளுக்கோ 6 பேக், 8 பேக் மோகத்தில் அதே கட்டாயம்! இது மிகவும் தவறு. உடலுக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்காமல், எடையைக் குறைக்கிற நோக்கத்தில், தவறான உணவுப் பழக்கங்களை மேற்கொள்வது உடலை பலவீனப்படுத்தி, வளர்ச்சியை பாதிக்குமே தவிர, வேறொன்றும் செய்யாது.
எல்லாவற்றிலும் நாகரிகத்தை விரும்பும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு உணவிலும் அதே ஆர்வம். பீட்சாவும் பர்கரும் சாப்பிடுவதுதான் அவர்களை நாகரிகமானவர்களாகக் காட்டு வதாக நினைப்பு. அந்த மாதிரி உணவுகள் அழகு, ஆரோக்கியம் என இரண்டுக்குமே எதிரிகள். மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு சேர்த்த உணவுகள் தினமுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. மிளகு, நரம்புகளைப் பலப்படுத்தி, நினைவாற்றலுக்கு உதவும். சீரகம், உடலைக் குளிர வைத்து, முகப்பருவை விரட்டும். வெந்தயம், கடுகு, இஞ்சி, எள், கருஞ்சீரகம், பப்பாளி, அன்னாசி போன்றவை பூப்படைந்த பெண்களுக்கு அவசியமானவை. டீன் ஏஜில் இருந்தே எடுத்துக்கொள்ளப் பழகினால், பின்னாளில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் வராது. தைராய்டோ, முறையற்ற மாதவிடாயோ பாதிக்காது. பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி பசலைக்கீரை, பாகற்காய், வாழைப்பூ சேர்த்த உணவுகளைக் கொடுத்து வந்தால், இன்று விஸ்வரூபமெடுத்து பயமுறுத்தும் பிசிஓடி பிரச்னை பக்கத்தில் கூட நிற்காது. டீன் ஏஜ் பெண்களுக்கு மாதத்தில் 5 நாள்கள் நெல்லிக்காய் சாறும், ஆண் பிள்ளைகளுக்கு ஆப்பிள், அத்திப் பழங்களையும் கொடுத்தால், வயதுக்கேற்ற வாளிப்புடனும் வனப்புடனும் திகழ்வார்கள். ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். நோயில்லாத வாழ்க்கையை இங்கிருந்தே தொடங்குவோமே!
பசலைக் கீரை கடைசல்
என்னென்ன தேவை?
பசலைக்கீரை - 1 கட்டு, குடமிளகாய் - 1, பயத்தம் பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தக்காளி - 2, வெங்காயம் - 1, பூண்டு - 10 பல், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக