st

இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா.?-(HEART AND TEETH)
இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா?

கோவை கே.ஜி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் சி.பாலசுப்ரமணியம், தினகரன் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்:

மாரடைப்பை வெல்ல முடியுமா?

மாரடைப்பு என்றும் மணி அடித்துக்கொண்டு வராது. இந்நோய் பலரது உயிரையும் பறித்துள்ள விநோத நோய். தள்ளிவைப்பு, அசட்டை ஆகியவை மாரடைப்பைவிட கொடிய நோய். முழு உடல் பரிசோதனையின்போது மாரடைப்பு அறிகுறி தெரியவந்தால், மாரடைப்பை நாம் வென்றுவிடலாம்.

நடக்கும்போது அதிகம் மூச்சு வாங்குவது எதனால்...?

ஹார்ட் அட்டாக் என்பது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது. இருதய தசைகளின் செயல்பாடு குறைவதால் இருதயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தின் அளவு குறைந்து, சரியாக ரத்தம் வெளியேறாத நிலையில் ஏற்படும் பாதிப்பே ஹார்ட் ஃபெயிலியர். சம தளத்தில் நடக்கும்போது மூச்சு வாங்கினால் ஹார்ட் ஃபெயிலியர் உள்ளது என்று அர்த்தம். உடனடியாக இருதய நோய் நிபுணரை சந்திப்பது நல்லது.

அதிக கோபம் ஆபத்தை விளைவிக்குமா?
அதிக கோபம் வரும்போது அதிகளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடும். உச்சக்கட்டமாக உயிரும் போய்விடும்.

சாதாரண நெஞ்சு வலிக்கு முதலுதவி மட்டும் போதுமா?
நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனே வீட்டுக்கு அருகில் உள்ள டாக்டரை பார்த்து உடனடி சிகிச்சை எடுப்பது நல்லது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தரமான இருதய நோய் நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும். நாளை பார்க்கலாம்... காலையில் செல்லலாம்... என தள்ளிப்போடக்கூடாது. இது காலனை வரவழைக்கும். மாரடைப்பு யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காது.

இதயநோய் ஏற்பட பற்களும் ஒரு காரணம் என்கிறார்களே. எப்படி?

பற்களில் பாக்டீரியாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் விடுகிறவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது. வயிற்றில் குடல் புண்ணை உருவாக்கும் ஹெலிக்கோ பேக்டர் பைலோரே என்ற நுண்ணுயிரி மாரடைப்பை உருவாக்குகிறது என தற்போது தெரியவந்துள்ளது.

உணவில் பயன்படுத்த உகந்த எண்ணெய் எது?
கொழுப்பு வியாதிக்கு முக்கிய காரணமாக இருப்பது சாப்பாட்டில் நாம் பயன்படுத்தும் எண்ணெய்தான். உணவில் நாம் பயன்படுத்தும் மூன்று விதமான எண்ணெயில் கரையும் கொழுப்பு, கரையாத கொழுப்பு என இருவித கொழுப்பு உருவாகிறது. தாவர வகைகளில் இருந்து தயாரிக்கும் எண்ணெய் சிறந்தது. விலங்குகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உகந்தது அல்ல.

அத்லெடிக் ஹார்ட் என்றால் என்ன?

விளையாட்டு வீரர்களுக்கு இருதயத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதுதான், அத்லெடிக் ஹார்ட் என்று சொல்லப்படுகிறது.

உணவில் வெள்ளை பொருட்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்களே, அது என்ன?

சர்க்கரை, உப்பு, மாவு என்ற மூன்று வெள்ளை பொருட்கள்தான் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன. அந்த வெள்ளை விஷயங்களை ஒதுக்கிவிட வேண்டும். இந்த வெள்ளை பொருட்களை ஒதுக்கிவிட்டு, மனதை எப்போதும் வெள்ளையாய் வைத்திருக்க வேண்டும். தினம் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நோய் நம்மை அண்டாது.

இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா? மாரடைப்புக்கு கொழுப்பு தான் காரணம் என்கிறார்களே?

மாரடைப்புக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனித மனம் ஏ, பி என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஏ பிரிவை சேர்ந்தவர்கள் சுறு சுறுப்புடன் எப்போதும் டென்ஷன் உடனேயே இருப்பார்கள். இலக்கை நிர்ணயித்து அதை அடைவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். இந்த மனம் பெற்றவருக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது.

Post a Comment