st

மூச்சு கலையே முழுமையான வாழ்க்கை.-(MOOCHU KALAIYE MULUMAIYANA VAZHKAI).

ஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.

 ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது.
 இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.


 ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும்.
 உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.
 அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான சுவாசம் செய்வதில்லை என்பதுதான் உண்மை.


 நமது நுரையீரலின் கொள்ளளவில் முப்பது விழுக்காடு மட்டுமே காற்றை உள்ளிழுத்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறது ஆய்வுகள்.
 இதனால் என்னவெல்லாம் எதிர் விளைவுகள் உண்டாகிறது என்பதை தெரிந்து கொண்டாலே மூச்சுக் கலையின் மகத்துவத்தை உணரமுடியும்.
 குறைவான சுவாசத்தினால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் போதுமான அளவு காற்று நிரம்பிட வாய்ப்பில்லாமல் போகிறது.
 இதன் காரணத்தினால் நுரையீரல் தனது செயல்பாட்டினை முழுமையாக செய்ய முடியாமல் போவதால் இரத்ததில் உள்ள கழிவுகள் முழுமையாக நீக்கப் படாமலும்,
குறைவான பிராண வாயுவையும் சுமந்து கொண்டு மீண்டும் உடலினுள் பாய்கிறது. 


 இப்படி கழிவுகளை சுமந்து கொண்டு செல்லும் இரத்தத்தினால், அது உடலில் செய்ய வேண்டிய பணிகளை முழுமையாக செய்ய முடியாமல் போகிறது.
 இதன் தாக்கம் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளிலும் கணிசமான பாதிப்பினை உண்டாக்குகிறது.


 இதன் தாக்கம் மூளையின் செயல்பாட்டினை மந்தமாக்குவதில் துவங்குகிறது. நாம் உட் கொள்ளும் உணவை முழுமையாக ஜீரணிக்க முடியாமல்,
அதில் உள்ள சத்துக்களை பிரித்தெடுப்பதில் குறைபாடுகள் உண்டாகிறது. இதனால் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைவதனால் உடலின் கழிவுகள் வெளியேறாமல்,
 தேங்கி நோய் உண்டாக்குவது வரை நீள்கிறது.


 "வெறும் மூச்சுதானே", என நாம் அசட்டையாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செயலுக்குப் பின்னால் எத்தனை பெரிய பாதிப்புகள் காத்திருக்கிறது.
 என்பதை உணர்த்திட வேண்டியே இத்தனை நீண்ட அறிமுகம் தேவையாகிறது. இந்த பாதிப்புகளை நம் மூச்சினை சீர் படுத்துவதன் மூலம் எளிதில்,
 சரி செய்யும் வாய்ப்பிருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். 


 அந்த வகையில் முதலில் நாம் எப்படி சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிதல் அவசியம்.
 ஆய்வுகளின் அடிப்படையில் நான்கு விதமான சுவாசத்தினை நாம் மேற்கொண்டிருக்கிறோம் என பட்டியலிட்டிருக்கின்றனர்.

அவை...
  • உயர் சுவாசித்தல்
  • மத்திம சுவாசித்தல்
  • கீழ் சுவாசித்தல்
  • முழுமையான சுவாசித்தல்


 நமது உடலையும், உயிரையும் பிணைத்திருப்பதும், அவற்றை வளர்த்தெடுப்பதும் சுவாசம் என்றால் அது மிகையில்லை.
 மனித உடலில் உற்பத்தியாகும் 60-80 விழுக்காடு கழிவுகள் சுவாசத்தின் வழியேதான் வெளியேறுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திராத தகவல்.
 இந்த தகவலை நவீன அறிவியலும் உறுதி செய்கிறது. நமது முன்னோர்கள் அறிவியல் வளராத ஒரு காலகட்டத்தில் சுவாசத்தின் அருமை பெருமைகள் உணர்ந்து,
 தெளிந்து அதனை நெறிப் படுத்தும் ஒரு கலையினை காலம் காலமாய் வளர்த்தெடுத்திருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் ஆச்சர்யமும், பெருமிதமும் கொள்ளக் கூடிய ஒன்று.


பிறந்த கணத்தில் இருந்து கடைசி மூச்சு வரையிலும் தொடர்ச்சியான வினைகளினால் ஆனதே நம் வாழ்க்கை.
வினைகளும், அதன் எதிர் வினைகளுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றன.


இதனை நல்வினை, தீய வினை என பொதுவில் பகுத்தாலும்... இவற்றை உருவாக்குவதும், அதில் உழல்வதும் நமது மனமே!, உடலுக்கு ஆற்றல் தர ரத்தம் ஓடுவதைப் போல,
உள்ளத்துக்கு ஆற்றல் தருகிறவை எண்ணங்கள்.


இந்த எண்ணங்களை இந்திய வேத மரபு சம்ஸ்காரங்கள் என்கிறது. இவற்றை அழிப்பதே ஞானத்தின் உயர்நிலை. இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றி அதை வலுவேற்றுகிற சுவாசம், நமது எண்ணங்களையும் சீர்படுத்தி, தேவயற்றவைகளை அழித்து மனதை மேம்படுத்துகிறதென நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். இதனை "துக்க நிவர்த்தி" என்கின்றனர்.

ஆச்சர்யமான தகவல்தானே.....

அமைதியான மன நிலையில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது, அதே நேரத்தில் துக்கம், பதட்டம், கொண்டாட்டம் போன்ற மன நிலைகளில்,
நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது என்பதை இதுவரை கவனிக்கா விட்டாலும், இனி கவனித்துப் பாருங்கள்.


சுவாசத்தின் துணை கொண்டு நமது எண்ணங்களையும் தூய்மை செய்திட முடியும் என்பதை நமது முன்னோர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

Post a Comment