இன்றைய நவீன யுகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிக்குச் செல்லும் நிலை வந்துள்ளது.
போதிய கல்வியறிவு, எத்தகைய செயல் களையும் திறம்பட முடிக்கும் தன்மை பெண்களுக்கும் உண்டு என்பதை தற்போதுதான் ஆணாதிக்க சமூகம் உணரத் தொடங்கியுள்ளது.
பொருளாதார சூழ்நிலையில் இன்று ஆண், பெண் இருவரும் பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் தற்போது உள்ளது..
இத்தகைய சூழலில் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்து வேலைக்குச் செல்லும் நிலையில் பல உடல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாக நேரிடுகின்றனர்.
பொதுவாக பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிலக்கு சுழற்சியின் காரணமாக பலவகையான சத்துக் குறைபாடுகள் உண்டாகிறது. இத்தகைய சத்துக் குறைபாட்டால் உடல் பலவீனமடைந்து பாதிப்படைகிறது.
இதனால்தான் நம் முன்னோர்கள் பெண்களுக்கு பருவம் எய்தியவுடன் வீட்டில் இருக்கவைத்து உடலுக்கு வலு கொடுக்கும் உணவுகளைக் கொடுத்து வந்தனர். மாதவிலக்கு காலங்களில் போதிய ஓய்வும் கொடுத்து வந்தனர். ஆனால், இன்றைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. மேலும் உணவு தயாரித்து அதை சாப்பிடக்கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக கிளம்பி பயணத்தின்போதே உண்கின்றனர் , அல்லது பட்டினி கிடக்கின்றனர். போதிய உணவு உண்ண நேரமின்மை, காலந்தவறிய உணவு, அவசர அவசரமாக உண்ணும் நிலை இவற்றால் பெண்களுக்கு குடலில் புண் உண்டாகிறது.
இதனால் பித்தம் அதிகரித்து அஜீரணம், தலைவலி, கை, கால் வலி, இடுப்பு, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் அசைவில்லாமல் கணனி முன் அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்கள் இரவுப் பணி, குறைவான தூக்கம், மன அழுத்தம் இவைகளாலும் பெண்களின் உடல் பாதிப்படைகிறது. இத்தகைய பாதிப்புகள் பின்னாளில் பெரிய நோய்களாக மாறிவிடும்.
இத்தகைய உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட இவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு அவசியத் தேவையாகும். அதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்கி உண்பது நல்லதல்ல. அவை உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவை.
இவர்கள் உணவில் கீரைகள், காய்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரை அடக்குவது அல்லது சிறுநீர் கழிவதைத் தடுக்க தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து நன்கு நீர் அருந்த வேண்டும். முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஊட்டச்சத்து மிகுந்த சூப் செய்து அருந்தலாம்.
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
ஆரைக்கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கொத்து
கறிவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 2 பல்
இஞ்சி - 1 துண்டு
காரட் - 1
புதினா - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 5
சோம்பு - 1 1/2 ஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1
இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து வாரம் இருமுறை சூப் செய்து அருந்தி வந்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக